ராமேஸ்வரம் அருகே அரசுப் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியைச்
சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மெய்யம்புளி மண்டப பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடு நிலைபள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக இந்தப் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே ஆசிரியர்கள் சிலர் துப்புரவு பணி பெண் உட்பட ஏழாம் வகுப்பை சேர்ந்த மூன்று மாணவர்களைக் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சொன்னதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று மாணவர்களும் துர்நாற்ற வாயு தாக்கியதில் மயக்கமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் மூவரும் பள்ளி நேரத்திலேயே வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வீட்டுக்கு சென்ற மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் சிகிச்சைக்காக ராமேஸ்வர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மூவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மாணவர்களைக் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். மேலும் தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் பள்ளியை சுத்தம் செய்வது, போன்ற துப்புரவு வேலைகளை அளிப்பதாகவும், அதை கண்டித்து கேட்டால் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்திவிடுவோம் என ஆசிரியர்கள் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளிக்குக் குழந்தைகளை படிக்க அனுப்பினால் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய சொல்வது நியாயமா? என்று கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சகாயசாமிலா கூறியதாவது,” கழிவுநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசியது உண்மைதான். ஆனால் மாணவர்களை ஆசிரியர்கள் யாரும் சுத்தம் செய்ய சொல்லவில்லை. துப்புரவு பணி பெண் உள்ளதால் மாணவர்களுக்கு எந்த வேலையையும் கொடுப்பதில்லை. எங்களுக்குத் தெரியாமல் செப்டிக் டேங்க் மூடியை சில மாணவர்கள் திறந்துள்ளனர் என இந்தச் சம்பவத்துக்கு எதிராகப் பேசியுள்ளார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
