பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு
ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:
வரி ஏய்ப்பு உள்ளிட்ட மோசடிகளைத் தடுப்பதற்காக பான் அட்டையை வைத்திருப்பவர்கள் அதற்கான எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அவ்வாறு பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டால், ஒரு நபர் அல்லது நிறுவனம் பல பான் அட்டைகளை வைத்துக் கொண்டு வரி ஏய்ப்பில் ஈடுபடுவது தடுக்கப்படும்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், கடந்த ஜூன் மாதம் வரை நாட்டில் மொத்தம் 25 கோடி பேர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்திருக்கின்றனர். பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்றார் அருண் ஜேட்லி