அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுப்பதில் டி.டி.வி. தினகரன்
காட்டும் தீவிரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கவலை கொள்ளச் செய்திருப்பதாகத் தெரிகிறது. எனவே அவர் தன் தரப்பில் உள்ள பலரையும் சந்தித்துப் பேசிவருகிறார் என்று சொல்லப்படுகிறது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இன்று (ஆகஸ்ட் 29) உருக்கமாகவும், ஆவேசமாகவும் அவரது அறையில் முதல்வர் பேசியுள்ளார்.
தமிழக அரசியலில் அனல் பறக்கிறது, அதிமுக எத்தனை அணிகள் என்று புரியவில்லை. ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றிணைந்ததால், தினகரன் அணி ஆவேசத்துடன் தலை தூக்கியுள்ளது. எம்ஏல்ஏக்களையும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களையும் தன் பக்கம் இழுத்துவருகிறார் தினகரன். அமைச்சர்கள் சிலரும் தினகரனுடன் தொடர்பில் இருந்துவருகிறார்களாம். சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தினகரனுடன் தொடர்பிலிருப்பதாக முதல்வருக்குத் தகவல் சென்றதால், முதல்வர், சண்முகத்திடன் தனிப்பட்ட முறையில் மனம்விட்டுப் பேசியிருக்கிறார். அதற்கு சண்முகம், “அண்ணே என்னைப் பற்றி தவறாக நினைக்காதிங்க” என்று பதில் அளித்தாராம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பி.அருண்மொழித்தேவன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், பண்ருட்டி சத்யாபன்னீர்செல்வம், சிதம்பரம் பாண்டியன் அனைவரும் சண்முகம் கட்டுப்பாட்டிலிருப்பவர்கள் என்கிறார்கள் சண்முகம் ஆதரவாளர்கள்.
