கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா??

பகுதி -7
:நாடாளுமன்ற விவாதத்தில் கட்சிகளின் நிலைப்பாடு
:பாராளுமன்றத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA) மசோதாவைச் சட்டமாக்கும் பொருட்டு 04.09.2013 அன்று மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சி சார்பான முன்பின் முரணான நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி ஒட்டுமொத்த இந்திய அரசுப் பணியாளர்களின் வாழ்வில் நீங்கா துயரை ஏற்படுத்தினர்.



*டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க):*

இம்மசோதா சட்டமாக எதிர்ப்புத் தெரிவித்து தன் கருத்துகளை முன்வைத்து பேசிய போதும், *வாக்கெடுப்பில் PFRDA மசோதா சட்டமாக அவையில் இருந்த அனைத்து திமுக உறுப்பினர்களும் ஆதரவு அளித்து வாக்களித்து அதிர்ச்சி அடைய வைத்தனர்.*


*செம்மலை (அ.இ.அ.தி.மு.க) :*

இந்த சட்டத்தினால் ஓய்வூதியர்களுக்குப் பயன் இல்லை. முந்தைய ஓய்வூதிய திட்டங்களைவிட இது எவ்வகையில் சிறந்தது என்று நிதியமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இத்திட்டத்தில் சமூக பாதுகாப்பு இல்லை ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு தன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சி. ஓய்வூதியம் ஊழியர்களின் உரிமை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இத்திட்டத்தினால் கார்பரேட்களுக்கு மட்டுமே நன்மை. இதனால் ஊழியர்களிடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது என்றார்.

*(தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அஇஅதிமுக, மத்திய அரசினை எதிர்ப்பதற்காக இச்சட்டத்தினை எதிர்த்து வாக்களித்தது. ஆனால் இத்திட்டத்தினை இந்தியாவில் முதன்முதலில் மத்திய அரசு நடைமுறைப்படுத்துவதற்கு 9 மாதங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி ஊழியர்களின் தலையில் மண்ணை அள்ளிப்போட்டது அதிமுக அரசு)*


*குருதாஸ் தாஸ்குப்தா (சி.பி.ஐ) :*

*இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்களின் சேமிப்பானது பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதுடன் நேரடி அன்னிய முதலீட்டிலும் பங்குகொள்கிறது.* ஓய்வூதியம் இல்லாமையால் வயதான காலத்தில் பிள்ளைகளால் உதாசீனப்படலாம். *அரசின் வட்டிவீதம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. 12% லிருந்து 8% குறைந்துள்ளது. இது 6% கீழ் குறையலாம்.* அரசு ஊழியர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பணி புரிந்தும் ஓய்வூதிய வரையறை இல்லை. இத்திட்டமானது ஒளியிலிருந்து இருளை நோக்கியும், மகிழ்ச்சியிலிருந்து துன்பத்திற்கும் அழைத்துச்செல்கிறது. ஆகவே, இத்திட்டத்தினை எதிர்க்கிறோம்.


*பாசுதேவ் ஆச்சார்யா (சி.பி.எம்) :*

பன்னாட்டு நிதியத்தின் 2001-ம் ஆண்டு பரிந்துரையின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் உலகவங்கி ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்கட்சியாக உள்ள பாஜக எந்த அடிப்படையில் இத்திட்டத்தினை ஆதரிக்கிறது. ஊழியர்களின் பணம் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும். இத்திட்டத்தினால் இருவகை ஊழியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். *ஒருவருக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உத்திரவாதப்படுத்தப்படுகிறது. மற்றொருவருக்கு ஊதியத்தில் 10% இழப்பு ஏற்படுவதுடன் ஓய்வின் போது எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்குப் பதில் இல்லை.* மேலும், இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தால் ஊழியரின் மொத்தப்பணமும் நஷ்டமடையும். இது இந்திய அரசியல் சாசனம் பிரிவு 14க்கு எதிரானது. சுமஉரிமைக்கு எதிரானது. எனவே, இத்திட்டத்தினை நாங்கள் எதிர்க்கிறோம்.


*ப. சிதம்பரம் நிதியமைச்சர் (காங்கிரஸ்):*

இம்மசோதா விவாதத்தில் 15 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளனர். *நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர்கள் பி.சி. கந்தூரி (பாஜக), யஷ்வந்த் சின்கா (பாஜக) இருவரும் சாதகமான அறிக்கையினை தந்துள்ளனர்.*

இத்திட்டத்தினால் 01.01.2004 க்கு முன்னர் பணியில் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை. அரசு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டுதான் இத்திட்டத்தில்  சேர்ந்துள்ளனர்.

டி.கே.எஸ். இளங்கோவன்(தி.மு.க) கட்சியைச் சார்ந்த பல அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

செம்மலை (அ.தி.மு.க) இம்மசோதாவினை எதிர்த்தபோதிலும் 06.08.2003 தேதிய அரசாணை மூலமாக 01.04.2003 முதல் இத்திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

*இத்திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கட்டாயப்படுத்தப்படுகிறது. மாநில அரசுகள் இத்திட்டத்தில் சேர கட்டாயமில்லை அது அவர்களின் விருப்பத்தினைப் பொருத்தது* என்று தமது பதிலுரையில் நிதியமைச்சர் தெரிவித்தார்.

அதிர்வுகள் தொடரும்.....

நன்றி : cpstamilnadu.blogspot.com

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...