மனநிலை பாதிக்கப்பட்டு குடும்பத்தில் இருந்து விலகியிருந்த சிறுவன் ஆதார் அட்டையால்
மீண்டும் ஹரியானா பானிபட்டில் உள்ள அவரது பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுரவ்(9), என்ற மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் டெல்லி மகளிர் ஆணையம் நடத்தும் பல்னாவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து சலாம் பாலக் டிரஸ்ட் என்ற குழந்தைகள் நல காப்பகத்துக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து, சலாம் பாலக் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது,” பல்னா தொண்டு நிறுவனத்தில் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே தங்குவதற்கு அனுமதியுள்ளதால் அவர் இந்தக் குழந்தைகள் நல காப்பகத்துக்கு மாற்றப்பட்டார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறுவன் கவுரவுக்கு தன்னுடைய பேர் மற்றும் பெற்றோரை தவிர வேறு எதுவும் நினைவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் சிறுவனுக்கு ஆதார் கார்டு வழங்கக் கண்விழி மற்றும் கை ரேகை ஆதாரங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது சிறுவனுடைய கண்விழி மற்றும் கை ரேகை ஆதாரங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அந்த ஆதாரங்கள் பானிப்பட்டில் உள்ள கவுரவின் பெற்றோருடையது என்பது தெரியவந்தது.
பின்னர், சிறுவன் பானிபட்டில் உள்ள அவருடைய தந்தை விகாசிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து விகாஸ் கூறியதாவது,” கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு ஞாயிறு அன்று கவுரவ் வீட்டிற்கு வெளியே விளையாடும் போது காணாமல் போனார். எல்லா இடங்களிலும் அவரைத் தேடியும் தனது மகன் கிடைக்கவில்லை. எனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தது மட்டுமல்லாமல் டிவி, செய்தித்தாள் என அனைத்திலும் விளம்பரம் கொடுத்தோம். இருப்பினும் கவுரவை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறினார். ஆனால் ஒருபோதும் எங்கள் மகன் கிடைக்கமாட்டான் என்று நம்பிக்கை இழந்த நிலையில் ஆதார் அட்டையால் மீண்டும் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய சிறுவனின் குடும்பத்தினர் ஆதாருக்கு நன்றி தெரிவித்தனர்.
விதியால் பிரிக்கப்பட்ட சிறுவனை ஆதார் அட்டை இணைத்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று கடந்த ஜூலை-11 ஆம் தேதி பெங்களூரு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த வளர்ச்சி குறைபாடு உடைய மூன்று குழந்தைகளை ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அவர்களுடைய பெற்றோருடன் ஆதார் அட்டையால் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
