இன்று ஆகஸ்டு 31 ஆம் தேதி அதிமுகவின் அனைத்து எம்.எல் ஏ க்களையும் கோட்டைக்கு
வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் இன்று காலை எம் எல் ஏ க்களுக்கு, ’கோட்டைக்கு வரவேண்டாம் முதல்வரின் கிரீன் வேஸ் ரோடு இல்லத்துக்கு வருமாறு’ தகவல் சொல்லப்பட்டது.
கடந்த 28 ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் எத்தனை எம் எல் ஏ க்கள் கலந்துகொண்டார்கள் என்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது. சுமார் 40 க்கும் மேற்பட்ட எம் எல் ஏக்கள் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அன்றைக்கு இதை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்தார். ஆனாலும், ‘தன் மைனாரிட்டியை தானே நிரூபித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி’ என்று சமூக தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில்... மாவட்ட வாரியாக எம் எல் ஏ க்களை சந்தித்து அவர்களின் தேவையை நிறைவேற்றவும், தனக்கான அவர்களின் ஆதரவை நேருக்கு நேர் வைத்து உறுதிப்படுத்தவும் முடிவு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அதற்காகத்தான் இன்று முதலில் கோட்டையில் எம் எல் ஏ க்களை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் கோட்டையில் இருக்கும் சில அதிகாரிகள் இன்னமும் தினகரன் தரப்புக்கு ஸ்லீப்பர் செல்களாக இருப்பதை அறிந்த முதல்வர் திடீரென கூட்டத்தை தன் வீட்டுக்கு மாற்றிவிட்டார்.
இன்று காலை கடலூர், விழுப்புரம், திருச்சி மாவட்ட எம் எல் ஏ க்களை கோட்டையில் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அவர்களை அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடு தன் வீட்டுக்கே வரழைத்துப் பேசினார் முதல்வர்.
எம் எல் ஏ க்களிடம் என்ன பேசினார் முதல்வர் என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
‘’சூழ்நிலை மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த முதல்வர், ‘இத்தனை எம் எல் ஏ க்கள் ஆதரவு’ என்று அமைச்சர்கள் சொல்வதை நம்பவில்லை. அதனால் தானே தன் கண் முன்னாலே எம் எல் ஏ க்களிடம் பேசி அதை உறுதிப்படுத்திக் கொள்ள முயல்கிறார். ஏற்கனவே சட்ட அமைச்சர் சிவி சண்முகம், தினகரனுடன் தொடர்பில் இருப்பதாக முதல்வர் கேள்விப்பட்ட தகவலை மின்னம்பலத்தில் எழுதியிருந்தீர்கள். இதுபோல தினகரனுடன் சில அமைச்சர்களும் தொடர்பில் இருப்பதாக தகவல் வருவதால் அவர்களையும் வைத்துக் கொண்டே எம் எல் ஏகளை சந்திக்கிறார்.
இன்று... காலை விழுப்புரம், கடலூர், திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்களான சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), பாண்டியன் (சிதம்பரம்), பிரபு (கள்ளக்குறிச்சி), குமரகுரு (உளுந்தூர்பேட்டை) ஆகியோர் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.
அவர்களிடம், ‘உங்ககிட்ட எல்லாம் தினகரன் தரப்புல பேசியிருப்பாங்கனு தெரியும்.
என்ன பேசினாங்க? அவங்க என்ன ஆசை காட்டினாலும் நீங்க மோசம் போயிடாதீங்க. ஆட்சிங்குறது தங்க முட்டையிடுற வாத்து. வாத்தை அறுத்து தங்க முட்டை தருவேன்னு அவர் சொல்லுவாரு. ஆனா அந்த வாத்தை வளர்த்து ஒவ்வொரு தடவையும் தங்க முட்டை தர்றதா நான் சொல்றேன். தங்க முட்டை கிடைக்கும்னு நம்பி வாத்தை அறுத்துக் கொன்னுட்டீங்கன்னா... ஆளுக்கு கொஞ்ச நஞ்ச கறி கூட கிடைக்காது’ என்ற முதல்வர் அமைச்சர்களிடமும், ‘நீங்கள்லாம் ஆட்சியின் பலனை அனுபவிக்கிறீங்க. ஆனா சில அமைச்சர்களே அங்க பேசுறதா தகவல் வர்றது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்.
இதையே ஒவ்வொரு மாவட்டத்தினரிடமும் சொல்லிவருகிறாராம் முதல்வர். பொதுக்குழு கூட்டத்துக்கு அவரவர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களையும் கூட்டி வரவேண்டும் என்றும் அதற்கான தேவைகள் என்ன என்பதை அமைச்சர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார் முதல்வர்.
இன்றே அனைத்து எம் எல் ஏ க்களிடமும் ஆலோசனை நடக்குமா என்பது கேள்விக் குறிதான். நாளையும் தொடரலாம்!