ஏற்கெனவே நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஒதுக்கப்பட்டிருக்கும்
நிலையில், இப்போது உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்ஸின் அதிகாரமும் குறைக்கப்பட்டிருப்பதைச் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.
இதுகுறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அதிகாரங்கள் குறைக்கப்பட்டதைக் கண்டிக்கிறோம். அவரை முழு அதிகாரமிக்க செயலாளராக மீண்டும் மாற்ற கோரிக்கை வைக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
உதயசந்திரன் மதுரை ஆட்சியராக இருந்தபோது பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்ராமங்கலம் ஆகிய பஞ்சாயத்துகளில் பத்து ஆண்டுகளாக உள்ளூர் கலகம் காரணமாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். 2011இல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்தபோது ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட வந்த தேர்வாணையத்தின் தலைவருக்கு எதிராக புகார் கொடுத்து, பதவி விலக செய்து நேர்மைக்கும் திறமைக்கும் எடுத்துகாட்டாக விளங்கியவர் உதயசந்திரன்.
உதயசந்திரனின் இந்த சாதனைகளை எல்லாம் சுட்டிக்காட்டியுள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்கம், ‘2017 மார்ச்சில் பள்ளிக்கல்விச் செயலாளராக பதவி ஏற்றபின் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து பள்ளிக் கல்வித்துறை சிறப்பாகச் செயல்பட்டுகொண்டு இருக்கிறது என்று பெயர் வாங்கி கொடுத்த உதயசந்திரனை, அதிகாரம் இல்லாத செயலாளராக மாற்றியதின் மூலம் இந்த அரசு தன் உண்மையான ஊழல் முகத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி இருக்கிறது. பத்து வருடங்களுக்கு மேல் மாற்றப்படாமல் இருக்கும் தமிழ்நாடு பாடத்திட்டத்தை மாற்றும் நடவடிக்கை அசுர வேகத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு, தேர்வுமுறை மாற்றம், ரேங்க் முறை ஒழிப்பு, புதிய சீருடை என்று அனுதினமும் புதிய சீர்திருத்த அறிவிப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கிறது. மாற்றத்தை எதிர்நோக்கி இருந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இந்த அதிகாரக் குறைப்பு அறிவிப்பு பேரிடியாக வந்து தாக்கி இருக்கிறது.
உதயசந்திரனின் இடமாற்றம் குறித்த சர்ச்சை மாத தொடக்கத்திலேயே வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயசந்திரனைப் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றி அமைக்கும் வரை பணிமாற்றத்துக்குத் தடை விதித்தது. இப்போது அந்த சர்ச்சை ஓரளவு அடங்கியுள்ள நிலையில், அவரை அதிகாரமற்ற செயலாளராக, கீழிறக்கப்பட்டு பாடத்திட்டங்கள் மாற்றங்களுக்கான குழுவில் மட்டும் செயலாளராக மாற்றி இருக்கிறது தமிழக அரசு. பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட வேண்டும் என்ற ஆணையின்மூலம் பாடத்திட்ட பணியையாவது உதயசந்திரன் முழுமையாக செய்ய முடியுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், இது நீதிமன்றத்தை ஏமாற்றும் நடவடிக்கையாகவும் உள்ளது.
க்ரானைட், தாது மணல் உள்ளிட்ட ஊழல்களைத் தோலுரித்துக் காட்டிய சகாயத்துக்குக் கொலை மிரட்டல், பதவி இறக்கம் கொடுக்கப்படுகிறது.
அரசின் இந்த நடவடிக்கையை சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. உதயசந்திரன் முழு சுதந்திரம் மற்றும் அதிகாரத்துடன் செயல்பட இந்த அரசு அனுமதிக்க வேண்டும். சகாயம், உதயசந்திரன் போன்ற திறமையான நேர்மையான அதிகாரிகளை ஒதுக்கிவைத்துவிட்டு இந்த அரசு சிறப்பாகச் செயல்பட முடியாது’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.
