உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹரின்
பதவிக்காலம் இன்றுடன் (ஆகஸ்ட் 27) முடிவடைகிறது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தாக்கூரின் பதவிக்காலம் முடிந்த பிறகு கடந்த 2011 முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த ஜே.எஸ்.கெஹர் கடந்த ஜனவரி மாதம் 44ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தின் முதல் சீக்கிய தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர். கடந்த 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த இவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1977ஆம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்தார். இவர் பஞ்சாப், சண்டீகர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
நேற்று முன்தினம் இவருடைய இறுதி வேலை நாள் முடிவடைந்தது. இந்த வாரத்தில் மட்டும் தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு முக்கிய தீர்ப்புகளை வழங்கியது. அதாவது, முத்தலாக் விவாகரத்து நடைமுறை சட்டப்படி செல்லாது, ஆதார் வழக்கில் தனிமனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை ஆகிய தீர்ப்புகள் அதிரடியாக வழங்கப்பட்டன.
இதுதவிர மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதிபதிகள் ஆணைய சட்டம் செல்லாது, அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது, சஹாரா தலைவர் சுப்ரதா ராயை சிறைக்கு அனுப்பியது உள்ளிட்ட தீர்ப்புகளையும் கெஹர் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது.
இவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் நீதிபதி கெஹருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அதில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பேசியதாவது, “தலைமை நீதிபதி கெஹர் பல்வேறு வழக்குகளுக்கு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். அதார் வழக்கில் இவர் அளித்த தீர்ப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சிறந்த பணிகளில் இதுவும் ஒன்று” என புகழாரம் சூட்டினார்.
“நாட்டின் தலைமை நீதிமன்றத்தில் தலைமை பொறுப்பை வழங்கிய நாட்டுக்கு நன்றி தெரிவித்தார்” தலைமை நீதிபதி.
இவருக்குப் பதிலாக நீதிபதி தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வரை அடுத்த 13 மாதங்களுக்குப் பதவி வகிப்பார் என தெரிகிறது.