தமிழகம் மற்றும் புதுவையில் இன்று(ஆகஸ்ட் 7) முதல்
வருகின்ற 10 ஆம் தேதி வரை பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் வட தமிழகத்திற்கு இடையில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை கன்னியாகுமரி வரை நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின், கடலோர பகுதிகளில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழை வருகின்ற 10 ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 5 செ.மீ., திருப்பூரில் 3 செ.மீ., அறந்தாங்கி மற்றும் நாகையில் தலா 2 செ.மீ., சின்னக்கல்லாறு 5 செ.மீ., வால்பாறை 4 செ.மீ.,சென்னை நுங்கம்பாக்கம், டி.ஜி.பி. அலுவலகம், நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., ஆலங்காயம், போச்சம்பள்ளி, தளி, வாணியம்பாடி தலா 2 செ.மீ., எண்ணூர், போளூர், உத்தமபாளையம், வானூர் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், 6 மாதங்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 2 வாரங்களில் மட்டும், 13 .76 அடி அதிகரித்து, தற்போது, 40 .௦8 அடியாக உள்ளது. இது போல மற்ற அணைகளிலும் நீரின் அளவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
