முதல்வர் பழனிசாமிக்கு எதிராக 19 எம்எல்ஏக்களை திரட்டி உள்ள தினகரன் தரப்பு, எப்படியும்
தங்களுக்கு ஆதரவாக கவர்னர் இருப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர். ஆனால் தினகரன் தரப்பினர் அப்செட் ஆகும் வகையில், கவர்னர் தனது கருத்தைத் தெரிவித்து விட்டார்.
முதல்வரை மாற்ற வேண்டும் என்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையை ஏற்க வாய்ப்பில்லை; ஏனென்றால், இன்று வரை அவர்கள் அ.தி.மு.க.,வில்தான் இருக்கின்றனர். அப்படி பார்க்கும்போது அது, முழுக்க முழுக்க உட்கட்சி பிரச்னை. அந்த பிரச்னையை அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அதில் தலையிட்டு செய்ய என்ன இருக்கிறது என்று கேட்டு, தன்னை சுற்றி வந்த சர்ச்சைகளுக்கு பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் கவர்னர்.
இதைக்கூட அவர் நேரடியாக சொல்லாமல், இதே பிரச்னையை வலியுறுத்துவதற்காக தன்னை சந்திக்க வந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் திருமாவளவனிடம் சொல்லி விட்டார்.
இது குறித்து, அவர்கள் வெளியில் சென்றதும் பத்திரிகையாளர்களிடம் கட்டாயம் சொல்வர் என்பதை அறிந்து தான், அதை அவர்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் கவர்னர்.
எதிர்பார்க்கவில்லை
பிரச்னைக்கு இப்படியொரு ரியாக்ஷன் கவர்னரிடம் இருந்து வரும் என்று, தினகரன் தரப்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கவர்னர் நல்லதே செய்வார் என்று ஒரு பக்கமும்; இன்னொரு பக்கம், கவர்னர் இதில் விரைந்து முடிவெடுக்க முடியவில்லை என்றால், ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் என்றும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர் தினகரன் தரப்பினர்.
நெருக்கடியில் இருந்து விடுபடும்விதமாகத்தான் கவர்னர், திருமாவளவன் மூலம் தன் கருத்தைத் தெரிவித்ததோடு, இந்த பிரச்னையை இதே ரீதியில் அணுகி, ஜனாதிபதியிடம் கொண்டு சென்றாலும், அவரும் அதே பதிலைத்தான் சொல்லக்கூடும் என்பதையும், கவர்னர், தன்னை சந்திக்க வந்த தமிழகத் தலைவர்களிடம் சொல்லி விட்டார்.
இதனால், தினகரன் தரப்பு, கோரிக்கையை மாற்றலாமா என்று யோசித்து வருகின்றனர். அப்படி செய்ய வேண்டும் என்றால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்கு, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதற்கும் கூட, சபாநாயகரிடம்தான் கோரிக்கை விடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும்.
அதையும் கூட இப்போதைய சூழலில், கவர்னர் செய்ய முடியாது. ஒருவேளை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும்பட்சத்தில், ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியை தினகரன் கவிழ்த்து விட்டார் என்ற கெட்டப் பெயர், அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டு, இரு தரப்பும் மொத்தமாக தங்களை புறக்கணித்துவிடக் கூடிய வாய்ப்பு இருப்பதையும் கண்டு அஞ்சி நடுங்கும் தினகரன், இந்தப் பிரச்னையை அடுத்தடுத்து எப்படி கொண்டு செல்வது என புரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது