இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக இந்தாண்டில் இதுவரை 1,100 பேர் மரணமடைந்துள்ளது
சுகாதாரத்துறை தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில், இந்த ஆண்டில் இதுவரை 22,186 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,100 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 488 பேரும், குஜராத்தில் 343 பேரும் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சல் காரணமாக மரணமடைந்தவர்களில் 45 சதவிகிதத்தினர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த ஆண்டில் இங்குப் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுமே இருந்தது.
25- 50 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவு மரணமடைந்துள்ளனர். உத்தரபிரதேசத்திலும் பன்றிக்காய்ச்சலில் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 2009ல் அங்குப் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 871 ஆகவும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆகவும் இருந்தது. தற்போது பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,798 ஆகவும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆகவும் உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் 86 பேரும் பஞ்சாபில் 31 பேரும் இமாச்சல் பிரதேசத்தில் 27 பேரும் மத்திய பிரதேசத்தில் 23 பேரும் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பன்றிக் காய்ச்சலால் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் மரணமடைந்துள்ளனர். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் அதிகளவு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.