அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி
ஆகிய நாடுகளை வீழ்த்தி, உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான ஹெச்.எஸ்.பி.சி. பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் மூலதன முதலீடுகள் போதுமானதாக இல்லை. மேலும், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் போதியளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், பொருளாதார வளர்ச்சியிலும் அரசியல் நிலைத்தன்மையிலும் இந்தியாவானது உறுதியான நிலையில் உள்ளது. மேலும், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் அதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகளை இந்தியா எளிதாக்க வேண்டும்.
இன்னும் பத்து ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். வருகிற 2028ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 7 லட்சம் கோடி டாலராக இருக்கும். அதேநேரம் ஜப்பான் நாட்டின் பொருளாதார மதிப்பு 6 லட்சம் கோடி டாலருக்குக் குறைவாகவும், ஜெர்மனி நாட்டின் பொருளாதார மதிப்பு 5 லட்சம் கோடி டாலருக்குக் குறைவாகவும் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.3 லட்சம் கோடி டாலராக உள்ளது. இதன் மூலம் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
