சேலத்தில் போலி மருத்துவரைக் கையும் களவுமாகப் பிடித்து
மாவட்ட ஆட்சியர் ரோகிணி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த ரோகிணி என்பவர் தற்போது சேலம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி பொறுப்பேற்ற ஆட்சியர் ரோகிணி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறார். மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில் நோயாளிகளுக்கு ஆங்கில வழி மருத்துவம் பார்த்து வந்த பாஸ்கர் என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது மருத்துவத்துறையில் உரியப் படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு பாஸ்கர் மருந்து மாத்திரைகளை வழங்கி வந்தது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து காவல்துறையிடம் போலி மருத்துவரை ஒப்படைத்த ஆட்சியர் மருந்தகத்தை மூடி சீல் வைத்தார். மேலும், மகுடஞ்சாவடி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகளை முறையே மேற்கொள்ளாத ஊராட்சி செயலர் செந்தில் என்பவரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் ரோகிணியின் இந்தப் பணி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த மாதம் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் சேலத்தில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
