கடும் எதிர்ப்பு எதிரொலி: பஸ் கட்டண உயர்வை நிறுத்திவைப்பதாக முதல்வர் அறிவிப்பு

பொதுமக்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக
பேருந்து கட்டண உயர்வை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுவையில் கடந்த 2012ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் உயர்வு, ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்தது.

அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயக்கப்படும் நகர சேவை பேருந்துகளுக்கு முதல் நிலை ரூ.5ஆகவும், அதன்பின் ஒவ்வொரு நிலைக்கும் ரூ.2க்கு மிகாமலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

விரைவு அல்லாத நிலை நிறுத்த பேருந்துகளுக்கு முதல் 6 கி.மீ. வரை உள்ள தூரத்திற்கு ரூ.8க்கு மிகாமலும், விரைவு பேருந்துகளுக்கு முதல் 25 கி.மீ. தொலைவுக்கு ரூ.25க்கு மிகாமலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.

இதனால் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து கோரிமேடு செல்ல ரூ.9ம், புதுச்சேரி - காலாப்பட்டுக்கு ரூ.14ம், புதுச்சேரி - திருக்கனூருக்கு ரூ.20ம், புதுச்சேரி - வில்லியனூருக்கு ரூ.14ம் என பொதுமக்களிடம் இருந்து பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், புதுவையில் இருந்து கடலூருக்கு ரூ.20ம், விழுப்புரத்திற்கு ரூ.26ம், திண்டிவனத்துக்கு ரூ.24ம் வசூலித்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும், பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திமுக சார்பில் முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பேருந்து கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பேரவை கமிட்டி அரங்கில் இன்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், எம்என்ஆர்.பாலன், ஜெயமூர்த்தி, சிவா, விஜயவேணி, தீப்பாய்ந்தான், அன்பழகன், பாஸ்கர், தலைமை செயலர் மனோஜ் பரிதா, போக்குவரத்து துறை செயலர் சுந்தரவடிவேலு, சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி:
புதுவையில் பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து அனைத்து எம்எல்ஏக்களும் என்னை சந்தித்து குறை கூறினார்கள். இதையடுத்து, அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அழைத்து பேசி கருத்துகளை கேட்டேன்.

இந்நிலையில் பொதுமக்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் என அனைவரது கருத்தும் ஒத்து போகிறது. எனவே, அமைச்சர் ஷாஜகான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் எம்பி, எம்எல்ஏக்கள் இடம் பெறுவார்கள். இக்குழு பேருந்து உரிமையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி, 3 மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கை அடிப்படையில் புதிய கட்டணத்தை அமல்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். அதுவரை பழைய கட்டணமே தொடரும். இதற்கு பேருந்து உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:
பேருந்து கட்டண உயர்வு சாதாரண, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டது. மேலும் சாலை மறியல் போராட்டங்களும் நடத்தினோம். தற்போது ஆலோசனைக் கூட்டம் நடத்தி பேருந்து கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனிடையே புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக, பாஜக சார்பில் இன்று சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...