யூடியூப் சேனல் ஆரம்பித்து இதுவரை
ரூ.6 கோடி வரை சம்பாதித்து போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளான் அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ரேயான்.
2017ஆம் ஆண்டில் யூடியூப் வழியாக அதிகம் சம்பாதித்தவர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு வயது ரேயான் 11 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்து எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளான். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய்.
ஆறு வயதாகும் ரேயான், பெற்றோரின் உதவியுடன் நான்கு வயதில் யூடியூப் சேனலைத் தொடங்கினான். இந்த சேனலில் சந்தைக்குப் புதிதாக வரும் பொம்மைகள் குறித்து அழகாக விளக்கம் கொடுப்பான்.
இவனுடைய மழலை மொழியைக் கேட்கவே லட்சக்கணக்கான அமெரிக்கக் குழந்தைகள் அடிமையானார்கள். இவனுடைய விளக்கம் ரசிக்கும் அளவுக்கு இருக்கும். இதனால் ஆறு வயதிலேயே முன்னணி யூடியூப் பிரபலமாக விளங்கி வருகிறான்.
இவனுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். ரேயான் தொகுத்து வழங்கிய GIANT EGG SURPRISE என்ற நிகழ்ச்சி மட்டும் கோடிகணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.
இவனுக்குப் பொம்மைகள் என்றாலே மிகவும் பிடிக்கும். வீட்டில் உறங்கும்போதுகூட சுற்றிலும் பொம்மைகளுடன்தான் உறங்குவான். அதிலும், கார் பொம்மைகள், ரயில்கள், மீனியன்ஸ் பொம்மைகள் என்றால் அலாதியான பிரியம்.

