இந்திய சுற்றுலாத் துறையில் அடுத்த பத்தாண்டுகளில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வறிக்கைகள் கூறியுள்ளன.
உலக பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் (டபுள்யூ.டி.டி.சி.) இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "இந்திய சுற்றுலாத் துறையின் வேலைவாய்ப்புகள் அடுத்த பத்தாண்டுகளில் 1 கோடி அளவில் அதிகரிக்கும். இந்திய சுற்றுலாத் துறையில் தற்போது 4.29 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் எண்ணிக்கை 2028ஆம் ஆண்டில் 5.23 கோடியாக அதிகரிக்கும். உலக அளவில் சுற்றுலா மற்றும் பயணங்கள் மூலமான பொருளாதாரத்தில் இந்தியா தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்திய சுற்றுலா மற்றும் பயணங்கள் துறையின் மதிப்பு 15.2 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. இதன் மதிப்பு 2028ஆம் ஆண்டில் இரட்டிப்பாக உயர்ந்து 32 டிரில்லியனாக அதிகரிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து டபுள்யூ.டி.டி.சி. தலைவர் குளோரியா குவேரா கூறுகையில், "சுற்றுலாத் துறை புதிய வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்குகிறது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதோடு, சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் இருக்கும். உலக அளவில் சுற்றுலாத் துறை வேலைவாய்ப்புகள் வேகமாக அதிகரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகவுள்ளது" என்றார். தற்போதைய நிலையில் இந்தியா 163 நாடுகளுக்கு இ-விசா சேவையை வழங்கி வருகிறது. அதேபோல இந்திய உள்நாட்டுப் பயணங்களை எளிமையாக்கும் வகையில் உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய விமான நிறுவனங்கள் 900க்கும் அதிகமான விமானங்களைப் புதிதாக வாங்க ஆர்டர் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
