இந்திய வங்கிகள் மோசடி காரணமாக ஒரு மணி நேரத்துக்கு சுமார் ரூ.1.6 கோடியை இழப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
விஜய் மல்லையாவின் ரூ.9,000 கோடி மோசடியைத் தொடர்ந்து, நீரவ் மோடியின் ரூ,12,700 கோடி மோசடி பெரும் பேச்சுக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறு கோடிகளை மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குப் பறப்பது தொடர்கதையாகிவிட்டது. ஏற்கெனவே வாராக் கடன், போதிய மூலதனம் இல்லாமை போன்ற பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் இந்திய வங்கிகளுக்கு, போலி ஆவணங்களைக் கொண்டு கடன் பெற்று நீரவ் மோடி போல மோசடி செய்து ஏமாற்றுவது வங்கிச் செயல்பாடுகளைப் பெரிதும் பாதிக்கின்றன. இந்நிலையில், இந்திய வங்கிகள் ஏமாற்றப்படுவது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்திய வங்கிகள் பணத்தை இழக்கும் 8 வழிமுறைகளில் ஒன்றான மோசடி (ஏமாற்றுதல்) பிரிவில் மட்டும் 60 சதவிகித பணத்தை வங்கிகள் இழக்கின்றன. 2014-17 காலகட்டத்தில் இந்திய வங்கிகள் மொத்தம் ரூ.42,276 கோடியை இழந்துள்ளன. இதில் சுமார் 89 சதவிகிதம் அல்லது ரூ.37,583 கோடியைப் பொதுத் துறை வங்கிகள் இழந்துள்ளன. தனியார் வங்கிகளில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.4,683 கோடியாகும். இந்திய வங்கிகளிலேயே அதிகபட்சமாக, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் இந்தியா மொத்தம் ரூ.5,743 கோடியை இழந்துள்ளது. இது மொத்த மோசடி இழப்பில் 15 சதவிகிதமாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
