போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ஸ்பாட் ஃபைன் எனப்படும் உடனடி அபராதம் விதிக்க வகை செய்யும் அரசாணைகளைத் திரும்பப்பெற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே மார்ச் 7ஆம் தேதி ஹெல்மட் அணியாமல் வந்த ராஜா - உஷா தம்பதியரின் இருசக்கர வாகனத்தைப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று எட்டி உதைத்தார். இதில் கணவன், மனைவி இருவரும் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் மூன்று மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை மேற்கோள் காட்டி டிராபிக் ராமசாமி பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "தவறிழைக்கும் வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதிக்க எந்தச் சட்டமும் இல்லை. சட்டப்படி வாகன ஓட்டிக்கு முதலில் நோட்டீஸ் கொடுத்து அதற்கு பதிலளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஆனால் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லவோ, நிரபராதி என்பதையோ நிரூபிக்க வாய்ப்பளிக்காமலோ உடனடி அபராதம் விதிப்பது சட்ட விரோதமானது" என்று தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்க வகை செய்யும் அரசாணைகளைத் திரும்பப்பெற வேண்டும் எனவும், அதை உடனடியாக நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் எனவும் டிராபிக் ராமசாமி தன்னுடைய மனுவில் கோரியுள்ளார்.