பிகாரில் உள்ள மருத்துவமனையில் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட, பெண் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 21) உயிரிழந்தார். இச்சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், சகார்சா மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 18) இரவு, அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது, மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால், டார்ச் வெளிச்சத்தில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவைசிகிச்சை குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவிவருகிறது. அந்த வீடியோவில் மயக்க நிலையில் படுத்திருக்கும் பெண்ணின் கையில் அடிபட்டிருப்பது தெரிந்தது.
மேலும் அவருக்கு மற்றொரு பெண் டார்ச் பிடித்திருக்க அந்த வெளிச்சத்தில் காக்கி உடை அணிந்த நபர் சிகிச்சை அளிப்பதுபோன்று காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. அதன்பின்னர், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், சதார் மருத்துவமனையில் டார்ச் வெளிச்சத்தில் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்ட அந்தப் பெண்ணின் உறவினர்கள், அவரின் இறப்புக்கு மருத்துவமனையின் நிர்வாகம்தான் காரணம் என்றும் நிர்வாகத்தின் கவனக்குறைவால்தான் இவர் இறந்துள்ளார் என்றும் குற்றம்சாற்றியுள்ளனர்.
