வால்பாறை:வால்பாறை அருகே அரசு பள்ளிக்கு சொந்த செலவில் தடுப்புச்சுவர் கட்டிக்கொடுத்த உடுமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரியை மக்கள் வெகுவாக பாராட்டினர்.
வால்பாறை அடுத்துள்ளது சவராங்காடு எஸ்டேட். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தடுப்பு சுவற்றை காட்டுயானை இடித்து சேதப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நகராட்சி சார்பில் தடுப்புச்சுவர் கட்டிதரப்படவில்லை. இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இதனையடுத்து உடுமலைபேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற என்.சி.சி.,அதிகாரி சுபுசிங் என்பவர், பள்ளி தடுப்புச்சுவர் மற்றும் கேட் அமைக்க தனது சொந்தப்பணம், 30 ஆயிரம் வழங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி கூறியதாவது, 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக மூலமாக பள்ளிக்கு உடுமலையை சேர்ந்த சுபுசிங் என்பவர் தடுப்புச்சுவர் மற்றும் கேட் அமைத்துக்கொடுத்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு அவர் செய்த இந்த உதவிக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, தெரிவித்தார்.
