கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டதால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (மார்ச் 27) மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்கல்வி படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசின் உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் 85,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அந்தத் தொகையை அரசு குறைத்ததால், மாணவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மேலும், இந்திய மாணவர் சங்கம் சார்பில் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
அதற்காக மாணவர் சங்க தலைவர் மாரியப்பன், செயலாளர் உச்சி மாகாளி ஆகியோர் தலைமையில் சென்னை சேப்பாக்கம் அருகே 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுகூடினர். தலைமைச்செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்து அதனை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதனைத் தடுக்கும் வகையில் போலீஸார் செயல்பட்டனர். போலீஸார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை மீறி மாணவர்கள் முன்னேறிச் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலையின் நடுவே உட்கார்ந்து போலீஸாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்து வேனில் கொண்டு சென்றனர்.
மாணவர் சங்க நிர்வாகிகள்,“உயர்கல்வி படிக்க கூடிய மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகை 30% குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அதை விலக்கிக் கொள்ள வேண்டும். மதம் மாறிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
