87.79 கோடி வங்கிக் கணக்குகளும், 16.65 கோடி பான் எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 9ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான சிவ் பிரதாப் சுக்லா பதிலளிக்கையில், “மார்ச் 5ஆம் தேதி நிலவரப்படி, 16,65,82,421 பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மார்ச் 2ஆம் தேதி வரையில் மொத்தம் 87.79 கோடி நடப்பு மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், வங்கிக் கிளைகளில் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் 6,811 ஆதார் சேவை மையங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன” என்று கூறினார்.
மார்ச் 31ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது 12 இலக்கை ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளது. இதன்மூலம் முறையற்ற கணக்குகளைக் களையும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. பான் எண்களை ஆதாருடன் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, மொபைல் எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டு வருகின்றன. ஆதார் சட்டத்துக்கு முரண்பாடான நடவடிக்கைகள் யாவும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று சிவ் பிரதாப் சுக்லா தெரிவித்தார்.