நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரப் பட்டியலில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலைகளில் சிறப்பாகச் செயலாற்றும் மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டின் விருதுநகர் 58.80 சதவிகிதப் புள்ளிகளும், ராமநாதபுரம் 58.30 சதவிகிதப் புள்ளிகளும் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. சத்தீஸ்கரின் கோர்பா 50.69 சதவிகிதப் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், மேற்கு சிக்கிம் 50.52 சதவிகிதப் புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா 50.44 சதவிகிதப் புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
அதேபோல, திறன் மேம்பாடு அடிப்படையிலான மாவட்டங்களின் பட்டியலில் ஜார்க்கண்டின் புர்பி சிங்க்பும் 49.19 சதவிகிதப் புள்ளிகளுடன் முதலிடத்திலும், உத்தரகாண்ட் மாநிலத்தின் உதம்சிங் நகர் 37.76 சதவிகிதப் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மேகாலயாவின் ரிபோய் 33.56 சதவிகிதப் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நாகலாந்தின் கிபைர் 25.01 சதவிகிதப் புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், மத்தியப் பிரதேசத்தின் விதிஷா 24.05 சதவிகிதப் புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
தரமான கல்வி அளிக்கும் மாவட்டங்களில் தெலங்கானாவின் பூபளப்பள்ளி 92.89 சதவிகிதப் புள்ளிகளுடன் முதலிடத்திலும், மகாராஷ்டிராவின் ஒஸ்மனாபாத் 67.08 சதவிகிதப் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், கட்சிரோலி 66.13 சதவிகிதப் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தானின் தோல்பூர் 65.21 சதவிகிதப் புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், மகாராஷ்டிராவின் வாஷிம் 64.61 சதவிகிதப் புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
