கேரள மாநிலத்தில் ஒரு நபருக்கு ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்தி புதிய தொழிலாளர் கொள்கைக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், தொழிலாளர் நலத் திட்டங்களில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதற்கு அம்மாநில அரசு நேற்று (மே 17) ஒப்புதல் அளித்துள்ளது.
அந்தக் கொள்கையில், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் கூறப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு தனிநபருக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.600 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கூலித் தொழிலாளிகள் உள்பட அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் கூறுகையில், சாதாரணத் தொழிலாளி ஒவ்வொரு நாளும் போதுமான வருவாயைப் பெறுவதை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் நோக்கம். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். 35 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். எத்தனை பேர் வேலையில் உள்ளனர், எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்பதை அறிந்துக்கொள்ள கணக்கெடுப்பு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மையங்களைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. வேலைத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். முதலாளி, தொழிலாளி உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், தொழிலாளர் பிரச்சினைகளைக் குறைக்க முடியும். வீட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காகத் தொழிலாளர் வங்கி அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.