தலைமைப் பொறுப்புகளில் பெண்களைப் பணியமர்த்த இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. உயர்நிலை பொறுப்புகளுக்குப் பெண்களைப் பணியமர்த்துமாறு வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு நடுத்தர நிலை பொறுப்புகளுக்கு பெண்களைப் பணியமர்த்த நிறுவனங்கள் அறிவுறுத்தி வந்தன. பணிமனையில் பாலின விகிதத்தை மேம்படுத்தவே இதுபோன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
அமைப்பு சார்ந்த தொழிலாளர் சந்தைக்குள் நுழையும் பெண்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஆண்களின் எண்ணிக்கைக்கு நிகராகவே உள்ளது. எனினும், பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் பாதியிலேயே பணியைக் கைவிட்டு வெளியேறுகின்றனர். இக்காரணங்களில், மகப்பேறு காலம் போன்றவையும் அடங்கும். உயர் பதவிகளுக்குச் செல்லச் செல்ல பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேலையிலிருந்து வெளியேறுகின்றனர், அல்லது வெளியேற்றப்படுகின்றனர். இதனால்தான் இன்றளவில் உயர் பதவிகளில் பெண்களைக் காணமுடிவதில்லை. ஆனால், உயர் பதவிகளில் பெண்களை நியமிக்க, ஊழியர்களைப் பணியமர்த்தும் ஆலோசனை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டால் இந்த நிலை மாறக்கூடும்.
பெண்களை உயர் பதவிகளுக்கும், தலைமைப் பொறுப்புகளுக்கும் தயார் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் திட்டங்களை வகுத்துள்ளன. மேர்ஸ்க் நிறுவனத்தில் ‘பேக்2வொர்க்’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் படி நிதி கட்டுப்பாட்டாளர், தொழில் உறவு மேலாளர், ஐடி திட்ட மேலாளர் போன்ற பதவிகளில் பெண்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
