காரணம் சொன்ன மத்திய அரசு: கண்டித்த உச்ச நீதிமன்றம்!


காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாத மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், காவிரி தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. உரிய காலத்தில் வாரியத்தை அமைக்காத மத்திய அரசு கடைசி நேரத்தில் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டது. இவ்வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் காவிரி வரைவு செயல்திட்டத்தை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவும் வரும் 16ஆம் தேதி வரை அவகாசம் கேட்டது மத்திய அரசு.

இந்நிலையில் இன்று (மே 3) உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. வழக்கின் விசாரணையைப் பார்வையிடுவதற்காக தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், சுந்தரம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வருகை தந்தனர்.

வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் எடுத்து வைத்த வாதத்தில், "காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டம் தயாராகிவிட்டது. வரைவுத் திட்டத்திற்குப் பிரதமர், மத்திய அமைச்சர்களிடம் ஒப்புதல் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அவர்களிடம் ஒப்புதல் வாங்க முடியவில்லை. எனவே வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் 10நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்" என்று வாதத்தை எடுத்துவைத்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர் சேகர் நாப்தே, ஒரு நாள்கூட அவகாசம் வழங்கக் கூடாது என்று வாதம் செய்தார்.

இதையடுத்து வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யாத மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம்.கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவது குறித்து எங்களுக்கு அக்கறையில்லை என்றும் கண்டித்தனர்.

மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடக அரசுக்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதற்குக் கர்நாடக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியுமா, முடியாதா என்று நீதிபதிகள் கோபமாகக் கேள்வி எழுப்பினர். தண்ணீர் திறக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பிரமாண பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விவசாயிகள் போராட்டம்

வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் மத்திய அரசு அவகாசம் கோரியதையடுத்து, உச்ச நீதிமன்ற வளாகத்தின் முன்பு கூடியிருந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாயி மரத்தின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...