இந்தியாவில் அதிக அளவில் அலுவலகங்களைக் குத்தகைக்கு எடுக்கும் பெரு நிறுவனங்களாக அமெரிக்க நிறுவனங்கள் விளங்குகின்றன.
இதுகுறித்து ஜே.எல்.எல். இந்தியா நிறுவனத்தின் ஆராய்ச்சி குழுவின் தலைவர் அஷுடோஷ் லிமாயே பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவில் ஏ கிரேடு அலுவலகங்களை வாடகைக்கு எடுத்துள்ள நிறுவனங்களில் 40 முதல் 45 விழுக்காடு நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களாகும். இந்திய நிறுவனங்கள் இதில் 35 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளன. இந்திய நிறுவனங்களில் பெரும்பாலானவை ரியல் எஸ்டேட் நிறுவனங்களாகும்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இந்திய நிறுவனங்களை அடுத்து இந்தியாவில் அதிகளவிலான அலுவலகங்களை ஐரோப்பிய நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளன. ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவில் 10 முதல் 15 விழுக்காடு குத்தகை அலுவலகங்களைக் கொண்டுள்ளன. இதர நாடுகள் மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள் 5 விழுக்காடு வாடகை அலுவலகங்களைக் கொண்டுள்ளன. "இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் குறைந்த செலவில் கிடைப்பதும், திறன் சார்ந்த வளங்கள் எளிதில் கிடைப்பதும்தான் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் அலுவலகங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்குக் காரணமாக உள்ளது" என்கிறார் ராம் சந்த்நாணி. இவர் இந்திய அட்வைசரி & டிரேன்சக்சன் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராவார்.
மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், காக்னிசன்ட், கண்வேர்ஜிஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஜேபி மோர்கன், வெல்ஸ் ஃபார்கோ மற்றும் பிளேக்ஸ்டோன் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் குத்தகை அலுவலகங்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.