வாக்கு இயந்திரத்தில் தவறு நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்!


பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் முறைகேடுகள் நடப்பதால் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற்ற வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், மீண்டும் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி தேர்தல் நடத்த இந்தியாவில் வாய்ப்பில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதேநேரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு நடக்கும் என்பதையும் தலைமை தேர்தல் ஆணையர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நேற்று (ஜூன் 2) கொல்கத்தாவில் ‘தேர்தல் நேர்மையும், தேர்தலில் பணத்தின் பங்கும்’ என்பது பற்றிய ஒரு கலந்தாய்வுக் கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபைக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத். அப்போது அவர் பல கேள்விகளுக்கான பதில்களை தெளிவுபடுத்தினார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறைகேட்டுக்கான கருவிகளாக இருப்பதாக எழுப்பப்படும் சர்ச்சைகளுக்கு அவர் விளக்கமாகப் பதில் அளித்தார்.

“அரசியல் கட்சிகள் தேர்தலில் தோல்வி அடைந்தால் அந்தப் பழியை யாராவது ஒருவர் மீது போட நினைக்கின்றன. அதற்கான பலிகடாவாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சிக்கிக் கொண்டன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பதில் பேசாது என்பதால் அரசியல் கட்சிகளுக்கு இது வழக்கமாகிவிட்டது” என்றார் ராவத்.

அதேநேரம் வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாள்வதில் தவறு செய்தால் அவை தவறாகவே செயல்படும் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர்.

“மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாள்வது பற்றி நாங்கள் தேர்தல் பணியாளர்களுக்கு மணிக்கணக்கில் பயிற்சி கொடுக்கிறோம். அந்தப் பயிற்சியின்போது அவர்கள் ஒரு நிமிடம் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்தால்கூட, பயிற்சியின் முக்கியமான கட்டத்தை இழந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பணியாளர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தவறாக இணைப்பு கொடுத்தாலோ, தவறாக ஸ்டார்ட் செய்தாலோ அவை தவறாகவே செயல்படும். இதுதான் மக்கள் மீது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும்” என்று முழுக்க முழுக்க தவற்றை தேர்தல் பணியாளர்கள் மீது திருப்புகிறார் தலைமை தேர்தல் ஆணையர். இது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், “2017 ஜூலை மாதம் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே இனிவரும் தேர்தல்கள் அனைத்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலமாகவே நடத்தப்படும் என்று தெளிவாக அறிவித்தாகிவிட்டது. எனவே மீண்டும் வாக்குச் சீட்டு முறையா என்ற கேள்வியே இங்கே எழவில்லை” என்று குறிப்பிட்டார் ராவத்.

நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றிய கேள்விக்கு, “இது அரசியல் அமைப்புச் சட்டம் சார்ந்த விஷயம். மத்திய அரசுக்குத் தேர்தல் ஆணையம் இதுபற்றித் தெரிவித்துள்ளது” என்று பதிலளித்தார்.

மேலும், பதிவு செய்யப்பட்டு ஆனால் தீவிரமாக செயல்படாத ஆயிரம் அரசியல் கட்சிகளைக் கண்டறிந்துள்ளதாகவும் அவற்றைத் தேர்தல் ஆணையத்தின் அழைப்புப் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் கூறினார். அதேநேரம் அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்றும் தெரிவித்தார் ராவத்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...