சிபிஎஸ்இ-க்கே சவால் விடும் அரசுப் பள்ளி!
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசுப்பள்ளிகளில் கலைப்பொருட்கள் செய்வது மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பாடம் என சிபிஎஸ்இக்கு இணையாக பாடமுறையை செயல்படுத்திவருகிறது ஓர் அரசுப்பள்ளி.
ராமநாதபுரம் மாவட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்களும் 21 மாணவ மாணவிகளும் உள்ளனர். சமீப காலங்களாக இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தும், பள்ளிக்கு வருவதற்கே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டாமலும் இருந்து வந்துள்ளனர்.
இதையடுத்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞானசெல்வன், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி மாணவர்களுக்கு இயற்கையான முறையில் பாடங்களை கற்றுக்கொடுப்பதுடன், அவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும், பனைமரங்களின் அழிவைக் காக்கவும் இயற்கை பொருட்களின் மீது ஈடுபாட்டை அதிகரித்து இயற்கை சார்ந்த விஷயங்களை புரியவைக்கவும் முடிவெடுத்தார்.
அதன்படி, உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரங்களில் பனையோலையில் மீன், காற்றாடி, ஓலைச்சுவடி, மெழுகுவர்த்தி, அடையாள அட்டை, ஓலைக் கடிகாரம் உட்பட பல கைவினைப் பொருட்களை மாணவ மாணவிகளுக்கு ஆர்வத்துடன் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இதனால் மாணவர்கள் மத்தியில் பள்ளிக்கு தொடர்ந்து வரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் உள்ளது போல விஷுவல் முறையில் பனை ஓலை உருவகங்கள் மூலம் பாடம் நடத்துவதால் எளிமையாக புரிகிறது என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், “தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளியில் அதிக செலவு செய்து அனுப்பியபோது இல்லாத உற்சாகம், தற்போது அரசுப்பள்ளிக்கு அனுப்பும்போது ஏற்பட்டுள்ளது. இயற்கை முறையில் பாடம் நடத்தி எளிதில் புரிய வைப்பதால் எங்கள் குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று பெற்றோர்களான எங்களுக்கும் குழந்தைகள் அறிவுறுத்துவது பெருமையாக உள்ளது” என்றனர்.
தலைமை ஆசிரியர் கூறுகையில், “இப்பொழுது மாணவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக செல்போனும் டிவியும்தான் இருந்து வருகிறது. தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பனை ஓலையைக் கொண்டு, உருவகங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதால் ஆர்வமாக பள்ளிக்கு வருவதோடு இயற்கையையும் நேசிக்க கற்றுக் கொண்டுள்ளனர். வீடுகளிலும் செய்துவருகின்றனர்” என மகிழ்கிறார் தலைமை ஆசிரியர்.
