நடப்பு நிதியாண்டின் மே மாதம் வரையில் ரூ.1,27,461 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் ஜூன் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நடப்பு 2018-19 நிதியாண்டின் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் அரசுக்கு வரி வருவாய் வாயிலாக ரூ.1,02,408 கோடி, கடனில்லா மூலதன வருவாயாக ரூ.1,004 கோடி, வரியில்லா இதர வருவாய் வாயிலாக ரூ.24,049 கோடி என மொத்தம் ரூ.1,27,461 கோடி வருவாயாகக் கிடைத்துள்ளது. இதில், கடன் வசூல் வாயிலாக ரூ.570 கோடியும், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக ரூ.434 கோடியும் கிடைத்துள்ளது. அதேபோல மாநில அரசுகளுக்கான மத்திய அரசின் வருவாய் பங்கீடாக ரூ.1,11,578 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட ரூ.15,217 கோடி அதிகமாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அரசின் செலவினங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய காலகட்டத்தில் மொத்தம் ரூ.4,72,954 கோடியை அரசு செலவு செய்துள்ளது. இதில் வருவாய் கணக்கில் ரூ.4,09,163 கோடியும், மூலதனக் கணக்கில் ரூ.63,791 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அரசின் ஒட்டுமொத்த வருவாய் செலவினங்களில் வட்டித் தொகை செலுத்துவதற்காக ரூ.73,606 கோடியும், மானியங்களுக்காக ரூ.88,689 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
