தமிழகத்துக்குக் கடன் வழங்கும் உலக வங்கி!
தேசிய சுகாதாரத் திட்டத்தின் சீர்திருத்தப் பணிகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.2,685 கோடி நிதியை உலக வங்கி அளிக்கவுள்ளதாகத் தமிழக சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மதுரையில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஜூன் 22ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு உலக வங்கியுடன் ஒரு முறையான ஒப்பந்தம் போடப்படும். இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.2,685 கோடி உலக வங்கியிடமிருந்து தமிழ்நாடு நிதி பெறவுள்ளது. இந்த நிதியின் மூலம் தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நிதியானது தமிழகத்தின் ஒட்டுமொத்த சுகாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும்" என்றார்.
சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் முதன்மைச் செயலாளரான ஜே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "சுகாதாரத் துறை விநியோகத்தை முன்பைக் காட்டிலும், சிறப்பாய் மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவும். உள்கட்டமைப்பு மேம்பாடு, அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம், பயிற்சி ஆகியவற்றை மேம்படுத்த இந்த நிதி பயன்படும்" என்றார்.
