வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கைத் துரத்து: சபையில் ஆவேசம்!
ஃபேஸ்புக்கையும், வாட்ஸ் அப்பையும் தமிழகத்திலிருந்து துரத்த வேண்டும் என்று, இன்று (ஜூன் 26) சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. பரமசிவம் கோரிக்கை வைத்தார். இது சட்டமன்ற உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தமிழக சட்டமன்றத்தில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்தான் அதிமுக எம்.எல்.ஏ. இப்படி ஒரு அதிரடியான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சேலம் சென்னை எட்டு வழிச் சாலை பற்றிய வதந்தி பரப்பியதற்காக அண்மையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சமூக வலை தளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேடசந்தூர் அதிமுக எம்.எல்.ஏ. பரமசிவம்,
“ ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்புபவர்களின் விவரத்தை ஃபேஸ்புக் நிறுவனம் காவல்துறைக்கு தரவேண்டும். அப்படி மறுத்தால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை தமிழகத்தில் இருந்து துரத்த வேண்டும்” என்று கூறினார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
