ஜோதிடர் உத்தரவு: தினமும் 350 கிலோ மீட்டர் பயணிக்கும் அமைச்சர்!
கர்நாடக முதல்வர் குமாரசாமியும், அவரது அமைச்சரவையில் இருப்பவரும், முதல்வரின் அண்ணனுமான ரேவண்ணாவும் ஜோதிடம், தெய்வீக நம்பிக்கை மிக்கவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஜோதிடர்களின் அறிவுரையைக் கேட்டு தினந்தோறும் 350 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது அலுவலகத்துக்குச் சென்று வருகிறார் அமைச்சர் ரேவண்ணா.
குமாரசாமி பதவியேற்ற புதிதில் அமைச்சர்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவரது அண்ணனும் அமைச்சருமான ரேவண்ணா, ஜோதிட நம்பிக்கைக்காக ஒரு நாளைக்கு 350 கிலோ மீட்டர் பயணம் செய்வது என்பது அரசுக்கு எரிபொருள் இழப்பை ஏற்படுத்தாதா என்று விமர்சனக் குரல்கள் கர்நாடக அரசியல், பத்திரிகை வட்டாரங்களில் எழுந்திருக்கின்றன.
கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது பதவியேற்பு நிகழ்ச்சியை ராகு காலத்துக்குப் பிறகு ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக 2.12 க்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தார். அவரது வரிசையிலேயே அண்ணன் ரேவண்ணாவும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே செயல்படுகிறார்.
கர்நாடக தேர்தலின் போதே ரேவண்ணா ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுக்கிர ப்ரீத்தி யாகத்தை குமாரசாமிக்காக நடத்தினார். வேண்டுதலின்படியே ஆட்சியைப் பிடித்துவிட்டதால் தொடர்ந்து ஜோதிடர்களின் ஆலோசனையை மதிக்கிறார். அமைச்சர் பதவியேற்றதும் ரேவண்ணா பெங்களூருவில் இருக்கும் வீட்டில் தங்க வேண்டாம், அந்த வீட்டின் கிரக நிலைகள் சரியில்லை என்று ஜோதிடர்கள் சொல்லிவிட்டார்கள். பெங்களூருவிலே அரசு பங்களாக்கள் முன்னாள் அமைச்சர்களால் இன்னும் காலி செய்யப்படாத நிலையில் அதற்கு மூன்று மாதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெங்களூருவில் பல வீடுகள் தேடினார் ரேவண்ணா. ஆனால் ஜோதிடர்களின் அறிவுரைப்படி எந்த வீடும் அமையாததால் கடைசியில், “உங்கள் சொந்த மாவட்டமான ஹசன் மாவட்டத்தில் சொந்த ஊரான ஹலேநர்சிபுராவிலேயே கொஞ்ச நாளைக்கு தங்குங்கள். அப்புறமாக பெங்களூருவில் குடியேறலாம்” என்று ஜோதிடர்கள் சொல்லிவிட்டார்களாம். அதனால் தினந்தோறும் ஹசன் மாவட்டத்தில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரம் தனது காரில் பயணித்து தலைநகர் பெங்களூவுக்கு வந்து செல்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சரான ரேவண்ணா.
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி ரேவண்ணா தினமும் காலை 5 மணிக்கு விழிக்கிறார். நடைப்பயிற்சி, பூஜைகள், உணவு முடித்துவிட்டு காலை 8 மணிக்கு பெங்களூருவுக்குப் புறப்படுகிறார். தலைமைச் செயலகம் வந்தடைய 12 மணி ஆகிவிடுகிறது. அதன் பின் அரசு அலுவல்கள், கட்சி அலுவல்களைப் பார்த்துவிட்டு இரவுதான் புறப்படுகிறார்.
ஒவ்வொரு நாளும் ஏன் ஹசன் மாவட்டத்தில் இருந்து பெங்களூருவுக்கு வருகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “எனக்கு இன்னும் பெங்களூருவில் அரசு இல்லம் ஒதுக்கப்படவில்லை. அதனால்தான்” என்று பதில் சொல்கிறார் ரேவண்ணா. ஆனால் கட்சியினரோ ஜோதிடர்கள் சொன்னபடி செயல்படுகிறார் என்கிறார்கள்.