கதக் அருகே நடைபெறும் மகதாயி போராட்டம் நேற்றுடன் 3ஆவது ஆண்டை நிறைவு செய்தது. இதையொட்டி, தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு 500 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் கதக், பாகல்கோட்டை, தார்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்பதற்காக மகதாயி-மல்லபிரபா நதிகள் இணைப்பு, கலசா-பண்டூரி குடிநீர் திட்டங்கள் வகுக்கப்பட்டன. கோவா அரசு இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இவை நிறைவேற்றப்படாமல் உள்ளன.
கர்நாடக விவசாயிகள் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி உண்ணாவிரதம், சாலை மறியல், முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். இருப்பினும், மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி கதக் மாவட்டம் நரகுந்துவில் மகதாயி திட்டத்தை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்களின் இந்த தொடர் போராட்டம் நேற்றுடன் (ஜூலை 16) மூன்றாவது ஆண்டை நிறைவு செய்தது. இந்தப் போராட்டம் இன்று (ஜூலை 17) நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதனையொட்டி, இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நேற்று தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், "மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால் மகதாயி போராட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்" என அதில் எழுதப்பட்டுள்ளது.
மகதாயி நதிநீரைப் பங்கிட்டு கொள்வது தொடர்பாக கோவா, கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினை தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு மகதாயி நடுவர் மன்றத்தில் ஆகஸ்டு மாதம் வெளியாகவுள்ளது.
