பனமரத்துப்பட்டி வில்வித்தை போட்டிகளில், பல்வேறு பதக்கங்களை குவித்த மாணவர், குடும்ப வறுமையால், சர்வதேச போட்டிக்கு தகுதிபெற்றும், பங்கேற்க முடியாமல் தவிக்கிறார்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே, நல்லியாம்புதுாரைச் சேர்ந்தவர் சூர்யா, 19; நாமக்கல் மாவட்டத்திலுள்ள, தனியார் பொறியியல் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
மாநில, மாவட்ட அளவில், வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று, பல வெற்றிகளை குவித்துள்ளார். தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று, கோப்பை, சான்று, பதக்கங்களை குவித்துள்ளார்.இது குறித்து, சூர்யா கூறியதாவது:
கடந்த, 2017 செப்., 26ல், தாய்லாந்தில் நடந்த சர்வதேச வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்றேன்.
அங்கு செல்ல பணமில்லாததால், போட்டியில் பங்கேற்க முடியவில்லை. 2018ல், மலேஷியாவில் நடக்கும் சர்வதேச வில்வித்தை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளேன். அங்கு செல்ல, 85 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.ஹிமாச்சலப் பிரதேசத்தில், கடந்த, 16 முதல், 19 வரை, தேசியளவில் நடந்த கபடியில், தமிழக அணியில் விளையாடி, மூன்றாம் பரிசு பெற்றேன்.
ஆக., 24 முதல், 27 வரை, இலங்கையில் நடக்கும் தெற்காசிய விளையாட்டு கபடியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளேன்.
அங்கு செல்ல, 80 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், குடும்ப வறுமையால், அவ்வளவு பணம் செலவிட்டு, வெளிநாட்டில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.
தந்தை மாதையன், சேலம், அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். தாய் சகுந்தலா, கூலித்தொழில் செய்கிறார்.கல்வி, குடும்ப செலவுக்கு பணமின்றி, நிதி உதவி கேட்டு, சேலம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இந்திய ராணுவ விமான படையில் சேர்ந்து, நாட்டுக்கு சேவை செய்ய விருப்பம். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, தங்கம் வெல்வது லட்சியம். அதற்கு, அரசு, தன்னார்வலர்கள் உதவ விரும்பினால், 96596 51245 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அவர்
கூறினார்.
