ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் போலீஸ் பணித்தேர்வை முன்னிட்டு, அங்கு இரண்டு நாட்களுக்கு இன்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்திருப்பதாவது:
“மாநிலத்தில் போலீஸ் பணியில் காலியாக உள்ள 13,142 பணி இடங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுகிழமையன்று ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 15) நடைபெறும் தேர்வு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 78 நகரங்களில் 664 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை அடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் தற்போது தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதற்காக சனி மற்றும் ஞாயிற்று கிழமை என இரு தினங்களில் தேர்வுகளை நியாயமாக நடத்துவதற்காக இன்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது.”
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சச்சின் பைலட், “பா.ஜ.க அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா விளம்பரம், இன்டர்நெட்டை தடை செய்வதன் மூலம் வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கத் தவறிவிட்ட அரசு மாநில மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது" என குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக போலீஸ் தேர்வுக்கு வந்தவர்கள் பயோமெட்ரிக் வருகை மூலம் அடையாளம் காணப்பட்ட போதிலும், அவர்கள் நகைகள் (மோதிரங்கள், வளையல்கள், காதணிகள்) மற்றும் தொப்பிகள் அணிந்து தேர்வு எழுதுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.