வருமான வரி செலுத்தியவர்களுக்கான ரீபண்ட் தொகையாக ரூ.7 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 1 முதல் 15 வரையில் ரீபண்ட் தொகைக்கு ரிட்டன் தாக்கல் செய்திருந்த வரி செலுத்தியோரின் விண்ணப்பங்களை வருமான வரித் துறையினர் பரிசீலித்துள்ளனர். இக்கால அவகாசம் ஜூன் 30 வரையில் நீட்டிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரீபண்ட் தொகை குறித்த பரிசீலனையை வருமான வரித் துறையினர் மும்முரமாக மேற்கொண்டுள்ளனர். அதில் 20,000 வழக்குகளில் ஒப்புதல் வழங்கப்பட்டு ரீபண்ட் தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளதாகவும், 99 சதவிகித ரீபண்ட் விண்ணப்பங்கள் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 44,07,000 வழக்குகளுக்கான ரீபண்ட் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 9 லட்சம் அதிகமாகும். கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் மட்டும் 2018-19 வரி செலுத்தும் ஆண்டுக்கான வருமான வரிகளுக்கு 3 லட்சம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரி செலுத்துவோருக்கான சேவை வழங்குவதில் கால தாமதம் இல்லாமல் வருமான வரித் துறை செயல்பட்டு வருகிறது. வரி செலுத்துவோரின் ரீபண்ட் விண்ணப்பங்கள் விரைந்து சரிபார்க்கப்பட்டு சுமார் ரூ.7 லட்சம் கோடி ரீபண்ட் தொகை வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
