வருகைப் பதிவு இல்லாமல் மாணவர்களைத் தேர்வெழுத அனுமதித்த கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒன்றரை லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் உள்ள உடற்கல்வியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 2016 - 17ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் தேர்வெழுத தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அனுமதி மறுத்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து, தங்களைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என அந்த கல்லூரியை சேர்ந்த 58 மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு நேற்று (ஜூலை 20) விசாரணைக்கு வந்தது. ஆவணங்களைப் பரிசீலித்தபோது மாணவர்களுக்குப் போதுமான வருகைப் பதிவு இல்லை என்பதையும், இதைச் சரிகட்டுவதற்காகக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுடன் முறைகேடுகளில் ஈடுபட்டதையும் நீதிபதி கண்டுபிடித்தார்.
முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு, ஒன்றரை லட்சம் அபராதம் விதித்தார். மேலும், 58 மாணவர்களும் சேர்ந்து அபராதமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த இரண்டு லட்சம் ரூபாய் அபராதத் தொகையை, சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியின் மருத்துவச் செலவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
