அரசு ஊழியர்களுக்குப் போதை மருந்து சோதனை!


பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்குப் போதை மருந்து சோதனை நடத்தப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்.

போதைப் பொருள் பயன்பாடு பஞ்சாப் மாநிலத்தில் அதிகமிருப்பதாகக் குற்றம்சாட்டி வருகின்றன ஆம் ஆத்மி, அகாலிதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். கடந்த மாதத்தில் மட்டும் 23 பேர் போதைப் பொருளைப் பயன்படுத்தியதால் மரணமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கடந்த 2ஆம் தேதியன்று முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் பஞ்சாப் மாநில அமைச்சரவைக் கூடியது. அப்போது, முதன்முறையாக போதைப் பொருள் கடத்தலில் சிக்கியவர்களுக்கும் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜூலை 4) பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்குக் கட்டாய போதைப் பொருள் சோதனை நடத்தப்படும் என அறிவித்துள்ளார் அமரீந்தர் சிங். காவல் துறை பணியாளர்கள் உட்பட அனைத்துத் துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றும், பணியில் சேர்ந்தது முதல் ஒவ்வொரு நிலையிலும் இந்தச் சோதனை நடத்தப்படும் என்றும் அவரது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான நடைமுறைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து, பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார் அமரீந்தர் சிங். பணி நியமனம் மற்றும் பணி உயர்வு நடவடிக்கைகளின்போது போதைப் பொருள் சோதனை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அமரீந்தர் சிங்கின் அறிவிப்பில் இதுவும் கூடுதலாகச் சேர்ந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...