சமூக வலைத்தளங்களைக் கண்காணிப்பது ஆபத்தானது!
சமூக வலைத்தளங்களைக் கண்காணிப்பதும்
அதை ஒழுங்குபடுத்துவதும் அரசை உளவு பார்க்கும் கண்காணிப்பு அரசாக மாற்றி விடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மத்திய அரசு சமூக வலைத்தளங்களையும் வாட்ஸ்அப் தகவல்களையும் முகநுால் பதிவுகளையும் கண்காணிக்க சமூக வலைத்தள கண்காணிப்பு மையங்கள் அமைப்பதற்காக ஒப்பந்ததார்களுக்கான டென்டர் விட்டுள்ளது. மத்திய அரசின் நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் இந்தியா லிமிடெட் டென்டர்களுக்கான அழைப்பு விடுத்துள்ளது.
டென்டர் ஆவணத்தில், ஒவ்வொரு மாவட்டந்தோறும் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க மையங்கள் அமைக்க வேண்டும். சமூக வலைத்தளங்களை கூர்மையாக 360 டிகிரி அளவு கண்காணிக்க வேண்டும்.ட்விட்டர், முகநுால் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மேடைகளில் யார் கருத்துகள் மூலம் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். அதன் மூலம் சமூக வலைத்தளங்களின் பதிவுகளை பாசிட்டிவ் (சாதகமானவை) நெகட்டிவ்(பாதகமானவை) என்று வகைப்பிரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம்எல்ஏ மஹகுவா மாய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கின் விசாரணையானது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏஎம்.கான்வில்கா்,டிஒய்.சந்திரசௌத் ஆகியோர் தலைமையிலான அமர்வின் முன்பாக நடைபெற்றது.
திரிணாமுல் கட்சி எம்எல்ஏவின் சார்பாக, விசாரணையில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம்.சிங்க்வி தனது வாதத்தில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை முக்கியமாக அந்தரங்கத்திற்கான உரிமையை மீறுவதாகும். சமூக வலைத்தளங்களில் .இடப்படும் பதிவுகளை கண்காணிக்க இந்த மையங்களை நிறுவிட அரசு முயல்கிறது. அரசு சமூக வலைத்தளங்களுக்குள் நுழைந்து அனைத்து குடிமக்களின் அந்தரங்க தகவல்களையும் கைப்பற்ற முயற்சிக்கிறது. இது அந்தரங்க உரிமை என்ற குடிமகனின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று தெரிவித்தார்.
அப்போது அமர்வு நீதிபதிகள் சமூக வலைத்தளங்களின் பதிவுகளை கண்காணிப்பது என்பது நாட்டின் அரசை உளவுப்பார்க்கும் கண்காணிப்பு அரசாக மாற்றி விடும் என்று தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்தப் பிரச்சினையை பரிசீலிப்பதாக அமர்வு நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கான உதவியை அரசின் அட்டார்னி ஜெனரல் கேகே.வேணுகோபால் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். பின்னர்,இந்த வழக்கில் பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.