வருகிறது ஹெல்மெட்டுக்குப் புதிய கருவி!
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வதால் பலர் தங்களது விலைமதிப்பற்ற உயிரை இழக்கின்றனர். தங்களை மட்டுமின்றி, குடும்பத்தையும் பாதுகாக்க ஹெல்மெட் அணிவது அவசியம் என்று பொது மக்களுக்குத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கருவியை ஐஐடி ஹைதராபாத் உருவாக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) திறன் வெகு வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறையாக மாறியுள்ளது. மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய சிறு பணிகளைத் தானியக்க செயற்கை நுண்ணறிவு பெரிதும் பயன்படுகிறது.
இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஐஐடி ஹைதராபாத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்க செயற்கை நுண்ணறிவு கருவியைத் தயாரித்துள்ளனர்.
ஐஐடி நிர்வாகம், ஹைதராபாத் காவல் துறையிடம் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி நகரத்தின் சிசிடிவி கேமராவில் இதன் சாஃப்ட்வேரைப் பொருத்தும். இந்த சாஃப்ட்வேர் வாகன ஓட்டிகளைக் கண்காணிக்கும். வீடியோ தகவல்களை எடுத்து, விதியை மீறுபவர்களைப் பற்றி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை அனுப்பும்.
ஆர்டிஓ இணையதளத்துடன் இணைத்து, வாகன ஓட்டிகளுக்கு நேரடியாக அபராதத்தை எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பிவிடும்.
இந்தத் தொழில்நுட்பம் பாலங்கள், சோதனை சாவடிகள் மற்றும் சாலை சந்திப்புகளில் பொருத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
