இன்று (ஜூலை 18) முதல் ஆகஸ்டு 10 வரை நடக்கும் இந்த நாடாளுமன்றத் தொடரில் மக்கள் பிரச்சினைகள் எதையும் விவாதிக்கத் தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளை நான் கேட்டுக் கொள்கிறேன். நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இந்த நாடாளுமன்றத்தின் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கோரினார்.
இன்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் ஏற்கனவே அறிவித்தது போல தெலுங்குதேசம் கட்சி பாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இதை ஆதரிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள் ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இன்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொண்டார்.
மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் இன்று ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேச எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் பிரதமருக்கு முன்பாகவே அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அவைக்கு வெளியே நாடாளுமன்ற வளாகத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முழக்கங்களை எழுப்பினார்கள்.
