தமிழகத்தில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை மூடலாம் என உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அதிரடி உத்தரவை நேற்று (ஜூலை 24) பிறப்பித்துள்ளது.
பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்த பொதுநல வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில இலவசக் கட்டாயக் கல்வி உரிமை திட்டத்தினை தமிழக அரசு வழங்குகிறது. இத்திட்டம் இலவசமாகத் தனியார் பள்ளிகளில் கல்வி பயில வழி செய்கிறது. ஆண்டுக்கு இரண்டு லட்சத்திற்கும் குறைவாக வருவாய் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் இந்த இலவசக் கல்வியால் தனியார் பள்ளிகளில் பயின்று பயன்பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த மனுவில் இத்திட்டம் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்த இலவசக் கல்வி திட்டத்தின்படி தனியார் பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் குழந்தைகள் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கலாம் என்பது சிறப்பு அம்சமாகும். இத்திட்டத்தின்படி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மூன்றாம் பாலினத்தவரின் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு சேரும் குழந்தைகளுக்குக் கட்டணம், சீருடை, நோட்டுப் புத்தகம் மற்றும் முழுக் கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்திவிடும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று (ஜூலை 24) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் செலுத்த முடியாத வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இத்திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்த்துப் பயன்பெறுகின்றனர். இலவசக் கல்வி திட்டத்தின்கீழ் சேரும் குழந்தைகளிடம் இருந்து அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்பதோடு, குழந்தைகளிடம் கட்டாயமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களை மிரட்டிக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மாணவர்களுக்குப் புத்தகம், சீருடை உள்ளிட்டவற்றைக் கொடுக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார்ப் பள்ளிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், அவர்களது உத்தரவில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உண்மை எனில் பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். 6 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து விசாரணை நடத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
