பொதுத் துறை வங்கிகளுக்கான ஏடிஎம்களில் 25 விழுக்காடு ஏடிஎம்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மென்பொருள் வசதிகள் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதிலில், ‘பொதுத் துறை வங்கிகளால் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம்களில் 25 விழுக்காடு ஏடிஎம்கள் எளிதில் பாதிக்கப்படும் வகையில் உள்ளன. இவற்றின் மென்பொருள் சேவைகள் இன்னமும் மேம்படுத்தப்படாமல் பழைய மென்பொருள் வசதிகளே இருப்பது பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது. இத்தகைய ஏடிஎம்களில் 74 விழுக்காடு பணம் மேம்படுத்தப்படாத மென்பொருள் சேவைகளைக் கொண்டே விநியோகிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகளுடன் ஒப்பிடுகையில், பொதுத் துறை வங்கிகள்தான் 70 விழுக்காடு தொழில் நடவடிக்கைகள், கடன் வழங்குதல் மற்றும் டெபாசிட்களைக் கொண்டுள்ளன. இதனால் அதிக வாடிக்கையாளர்களுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மேம்படுத்தப்படாத மென்பொருள் சேவைகள் உள்ளன. 2017 ஜூன் முதல் 2018 ஜூன் வரையிலான காலத்தில் சுமார் 25,000 புகார்கள் இதுதொடர்பாக (டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவை சேர்த்து) குவிந்துள்ளன. இதனால் வங்கிகள் தங்களது மென்பொருள் சேவையை உடனடியாக மேம்படுத்த வேண்டுமென்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
