பிபிசியின் சீனப்பிரிவு பெண் பத்திரிகை ஆசிரியர் கேரி கிரேசி ஆண் ஆசிரியருக்கு ஈடாக சம ஊதியம் தராததால் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவரிடம் மன்னிப்புக் கேட்ட பிபிசி சம ஊதியத்தின்படி கணக்கிட்டு அவருக்கு மறுக்கப்பட்ட நிலுவைத்தொகையை வழங்கியது.
கடந்த ஜனவரியில் பிபிசியில் பணிபுரியும் ஒரு ஆண் பத்திரிகை ஆசிரியருக்கு ஈடாக சம ஊதியம் வழங்காததால் கிரேசி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமாவைத்தொடர்ந்து பிபிசிக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், பிபிசி மீதான நம்பிக்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அது ஆண் - பெண் சமத்துவத்திற்கான சட்டத்தை உடைக்கிறது. வெளிப்படையான, நேர்மையான சம ஊதியத்தை எதிர்க்கிறது எனத்தெரிவித்திருந்தார்.
2013இல் வடஅமெரிக்காவின் பத்திரிகை ஆசிரியராக ஜோன் சோப்பல் என்ற ஆண் பத்தரிகையாளர் பதவி ஏற்றபோதுதான் கிரேசி சீனப்பிரிவு பிபிசியின் ஆசிரியராக பதவி ஏற்றார். சோப்பலுக்கும் கிரேசிக்கும் ஊதியத்தில் பெரும் வேறுபாடுகள் இருந்ததை பிபிசியே ஒப்புக்கொண்டது. பெண் என்ற முறையில் பாகுபாடு காட்டும் பிபிசியின் நடவடிக்கையை ஆட்சேபிக்கும் விதமாக கிரேசி ஜனவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் கிரேசியுடம் மன்னிப்புக்கேட்ட பிபிசி 2013லிருந்து சம ஊதியத்தில் தர வேண்டிய நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
கிரேசி, தனக்கு கிடைக்கப்போகும் பெருந்தொகையை பெண்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வரும் பேஸட்டு சொசைட்டி என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
