டிசம்பரில் சந்திரயான் – 2 ஏவப்படும்!


நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரனை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது நிலவில் இருக்கும் நிலப்பரப்பை ஆய்வு செய்து தகவல் அனுப்பும் திறன் கொண்டது. இதன் மற்றுமொரு பாகம் 2017-2018ஆம் ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்படும் என முன்னரே இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி, நிலவை ஆய்வு செய்வதற்காக சுமார் 3290 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை 800 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ தயாரித்துவருகிறது. இந்த விண்கலத்துடன் நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்யும் ரோவர் கருவியையும் இணைத்து அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.



கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதியன்று அதிநவீன தொலைத்தொடர்பு சேவைக்காக ஜிஎஸ்எல்வி எஃப்-08 ராக்கெட் மூலம் இஸ்ரோ தயாரித்த ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் உடனான தொடர்பு இரண்டு நாட்களிலேயே துண்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டிருந்த ஐஆர்என்எஸ்எஸ் – 1ஹெச் செயற்கைக்கோள் முயற்சியும் சற்று பின்னடைவைச் சந்தித்தது.

இதனையடுத்து, நிறைய சோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் சந்திரயான்-2 திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, கடந்த மார்ச் மாதம் குறிப்பிட்டிருந்தார் இஸ்ரோ தலைவர் கே.சிவன். இதனால் ஏப்ரல் மாதத்துக்குப் பதிலாக, வரும் அக்டோபர் மாதம் சந்திரயான்-2வை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறியிருந்தார்.



வெற்றிகரமான சந்திரயான்-1, மங்கள்யான்-1 திட்டத்துக்குப் பின்னர் இரண்டு முறை பின்னடைவைச் சந்தித்த காரணத்தினால், மிகுந்த சரிபார்ப்புக்குப் பின்னர் சந்திரயான்-2 ஏவுகணையை விண்ணில் செலுத்தினால் போதும் என்று இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சந்திரயான்-2 விண்கலத்தை வரும் அக்டோபர் முதல் வாரத்தில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், தற்போதைய காலநிலை மாற்றத்தைக் கருத்தில்கொண்டு இரண்டாவது முறையாக சந்திரயான்–2வை ஏவும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இது டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

வரும் டிசம்பர் மாதத்தில் இஸ்ரேல் நாடும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரு நாடுகளிடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...