காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மழை!
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
வலுப்பெற்றுள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 14) மாலை 5 மணி முதல் மழை பொழியத் தொடங்கியது. இது பெருமழையாக மாறி இரவு முழுவதும் தொடர்ந்தது. இதனால், சென்னை மாநகரத்தில் மட்டும் 35மி.மீ. மழை கொட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 15) பேட்டியளித்தார் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன். அப்போது, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுநிலையானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். “இது, தற்போது புவனேஸ்வர் நகரின் தென்கிழக்கே சுமார் 30 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, வால்பாறையில் மிகப் பெருமழையும், தேனி,திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெருமழை முதல் மிகப் பெருமழையும், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் பெருமழையும் பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியியின் இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தரை இடைவெளி விட்டு மழை பெய்யும். எனவே, வடக்கு ஆந்திரா, வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இன்றைய நிலவரப்படி, அதிகபட்சமாக செங்கோட்டையில் 27செ.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 20 செ.மீ. மற்றும் பாபநாசத்தில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தியா வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிசா, கடலோர கர்நாடகா, கேரளா, உ.பி., அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தராகண்ட், ஹரியானா, சண்டிகர், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு ம.பி., கோவா, மத்திய மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை பெருமழை முதல் மிகப் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் வங்கக் கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் 35 முதல் 60 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத், கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், ஒடிசா, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

