டெங்கு பாதிப்பில் தமிழகம் நான்காவது இடம்!
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 1,701 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மழைக் காலங்களில் பரவும் டெங்கு போன்ற தொற்று நோய்கள் தற்போது ஆண்டு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 1.53 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு, 52 பேர் இறந்துள்ளனர். இதனால் டெங்கு பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.
டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நாடு முழுவதும் கடந்த 7 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 14,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 32 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 2,897 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவதாக ராஜஸ்தானில் 1,912 பேரும், மூன்றாவதாக கர்நாடகாவில் 1,903 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நான்காவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 1,701 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், நாட்டிலேயே அதிகமாகத் தமிழகத்தில் தான் 1,451 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகம் டெங்கு பாதிப்பில் முதலிடத்தில் இருந்தது.
நடப்பாண்டில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தனர். அதனால் தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
