இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டுமென்று கோரி தொடரப்பட்ட வழக்கில், ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கும் விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனத்தை ஓட்டுபவரும், பின்னாள் உட்கார்ந்து வருபவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்தால் மட்டும் போதாது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
2015ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் படி, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு வாகன ஓட்டிகளிடம் அபராதம் மட்டும் விதிப்பது மட்டுமே விழிப்புணர்வு அல்ல என்று கூறிய நீதிபதிகள், வாகன ஓட்டிகளுக்கு வேறு எந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்ததுள்ளது என சரமாரியாக தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியனர்.
"இருசக்கர வாகனத்தில் செல்பவர்களில் வாகன ஓட்டிகளே பலர் ஹெல்மெட் அணியாமல் செல்வதை, நாங்களே பலமுறை சாலைகளில் செல்லும் போது பார்த்திருக்கிறோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மேட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை இனி உறுதியாகக் கடைப்பிடிப்போம் எனத் தமிழக அரசு உறுதியளித்தது.
இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ள மோட்டார் வாகன சட்ட விதிகள் அமல்படுத்தப்படும் எனக்கூறிய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், இதுசம்பந்தமாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் பயணித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
