பள்ளிகளில் பாலியல் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நேற்று பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வியியல் ஆராய்ச்சி - பயிற்சி நிறுவன முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
சமூகப் பாதுகாப்புத் துறையின் இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். போக்சோ சட்டத்திலுள்ள விதிகள் பற்றியும், குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் கல்வி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மாணவர்கள் பள்ளிகளில் பாதிக்கப்பட்டாலும், வெளியில் பாதிக்கப்பட்டாலும், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.
